பிள்ளையார் உடைப்பு. விடுதலை - 11.5.1953 Featured

Rate this item
(1 Vote)

     தமிழ்நாட்டில் சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்களாகிய நாம் 100-க்கு 72 பேர்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறோம். பாக்கி 28 பேர்களில் பஞ்சமர் 15 பேர்களும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 10 பேர்களும், பார்ப்பனர் 3 பேர்களும் ஆக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

   பஞ்சமர்களில் 15 விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு கல்வி, உத்தியோகம் முதலியவை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்திலேயே நிபந்தனை ஏற்பட்டு அந்தப்படி அளிக்க சர்க்கார் முன்வந்து வேண்டிய உதவிகளும் செய்து வரப்படுகிறது. அதுபோலவே முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அளிக்க அரசியல் சட்டத்தில் நிபந்தனை இல்லாவிட்டாலும் அவர்கள் தக்க அளவுக்கும் விகித அளவுக்கு மேலும் கல்வியும் உத்தியோகமும் அடைந்து வருகிறார்கள்.

     அடுத்த குறைந்த எண்ணிக்கை விகிதக்காரரான பார்ப்பனர்கள் 100-க்கு 3 பேர்களையும் விட குறைந்த விகிதக்காரர்களானாலும் அவர்களுக்கு எந்த விகிதாசாரமும் இல்லாமல் 100-க்கு 100 வீதம் கல்வியும், 100-க்கு 100 வீதம் உத்தியோகம் பதவி சுகவாழ்வு வசதியும் வாய்ப்பும் பெற்று சகல துறைகளிலும் மேன் மக்களாகவும் தலைவர்களாகவும் எஜமானர்களாகவும் இருந்து வருகிறார்கள். 

     ஆனால், மேலே குறிப்பிட்ட சூத்திரர்கள் என்பவர்களாகிய நாம் 100-க்கு 72 வீதம் பெருத்த எண்ணிக்கை விகிதம் உள்ளவர்களாக இருந்தும், கல்வியில் 100-க்கு 10 வீதமும், உத்தியோகம் பதவிகளில் 100-க்கு 34 வீதமேதான் அனுபவித்து வருகிறோம். ஏன்எனில் நம்மில் கற்றவர்களே 100-க்கு 10 இருக்கும்போது அதில் 4ல் 1, 8-ல் 1 பேருக்குத்தான் உத்தியோகம் கிடைக்க முடியும். அதுவும் பார்ப்பனர் எடுத்துக் கொண்டது போக மீதி. ஆதலால் நாம் கல்வியிலும், அரசாங்கம் முதல் மற்ற உத்தியோக பதவிகளிலும் நமக்கு மற்றவர்கள்ளைப் போன்ற விகதம் ஏன் அடைய வில்லை என்பது பற்றிய கிளர்ச்சிதான் இன்று தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் செய்துவரும் கிளர்ச்சியின் முக்கியத்துவமாகும்.

     இந்தக் கிளர்ச்சியானது இன்று இந்த நாட்டில் தன்னை தமிழன், திராவிடனுக்கு - தமிழனுக்குப் பிறந்த தமிழன் என்று கருதிக் கொண்டிருக்கும் எல்லா சூத்திரன் என்பவர்களுக்கும் உரிமையான கிளர்ச்சியாகும். இந்தக் கிளர்ச்சியை ஒழிப்பதற்காக பார்ப்பனர்கள், சூத்திரர்களில் சிலரை எப்படியோ தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவர்களையே விட்டு எதிர்க்கச் செய்கிறார்கள்; அடக்கப் பார்க்கிறார்கள்.

    பார்ப்பனர்களில் எந்தப் பார்ப்பனன் (படித்தவனானாலும், வக்கீல், டாக்டர், வாத்தியார் முதலிய பதவிகளில் இருப்பவனானாலும், பூமி, வியாபாரம், யந்திரசாலை வைத்து நடத்தல் முதலிய காரியம் செய்பவனாக இருந்தாலும், உத்தியோகத்தில் இருந்தாலும், தன் ஜாதியை முன்னுக்குக் கொண்டு வரும் வேலையிலும், திராவிடர் கழகத்தை ஒழிக்கும் வேலையிலும் மிகவும் முன்னணியில் இருந்து கொண்டு மதக் கட்டளைபோல் வேலை செய்து முன்னேறி வருகிறார்கள். 

   ஆனால், தமிழனோ, சூத்திரனோ என்றால், அவன்வன் நலத்தை மாத்திரம் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பது மாத்திரமல்லாமல், கழக முயற்சிக்கே - தமிழர் வாழ்வுக்கே கேடு செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். தமிழ்ப் புலவர்கள் முதல் தமிழ் கோடீஸ்வரர்கள், தமிழ் மந்திரி, சட்டபை மெம்பர்கள், கலெக்டர்கள், ஜட்ஜுகள் ஈறாக உள்ளவர்களோ எவரும் தங்கள் சுயநலத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் காலில் விழுந்து எதை விட்டுக் கொடுத்தாவது பயன் பெறப் பார்க்கிறார்கள்.

     இந்த நிலையில் திராவிடர் கழகம் சூத்திரத் தன்மையை ஒழிக்கவும், சூத்திரர்களை மனிதத் தன்மை அடையச் செய்யவும் செய்ய வேண்டிய வேலை என்ன என்று சிந்தித்தால், சட்டசபை மூலம், பதவி பெறுவதன் மூலம், பணக்காரன் விளம்பரக்காரன் ஆவதன் மூலம் முடியாது என்று தெரிந்து கொண்ட நாம், சூத்திரத் தன்மைக்கு ஆதாரமாயிருக்கிற ஆதரங்களை - ஆதரவுகளை அழித்து ஒழிக்க வேண்டிய வேலையையாவது செய்ய வேண்டுடாமா என்று கேட்கிறேன்.

   சூத்திரத்தன்மை நமக்கு இருந்து வருவதற்கும், அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருவதற்கும், மதம் காப்பாற்றப்படுவதற்கும் வேத சாஸ்திர புராணங்களும், நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பிராமணர்களாகவும், ஆதிக்கக்காரர்களாகவும் வாழ்வதற்கும் கடவுள்களும் கோயில்களுமல்லவா காரணம் என்று கேட்கிறேன். ஆம் என்றால் இவைகள் அனைத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டாமா என்று தமிழர்களை - சூத்திரர்களை கேட்கிறேன்.

      நான் இதுதான் சரியான வழி; சூத்திரத் தன்மை ஒழிவதற்கும், நம் பாமர, ஏழை, தாழ்ந்த சாதி என்னும் பாமர மக்கள் தங்கள் இழிவு நீங்கி விகிதப்படி கல்வி, பதவி பெற்று முன்னேறுவதற்கும் இதுதான், அதாவது இந்த இந்துமதம், இந்து வேத சாஸ்திர புராண இதிகாசங்களுடன் இந்துக் கடவுள்கள் என்னும் உருவ வழிபாடுகள், கோயில், பூசை, உற்சவம் முதலியவை ஒழிக்கப் பட வேண்டியதுதான் என்று கருதுகிறேன். திராவிடர் கழகமும் அப்படியே கருதுகிறது. திராவிடர்களில் பலரும் அவர்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் அவர்களில் அநேகர் அப்படியே கருதுகிறார்கள். 

     நமக்கு இவைகளை ஒழிக்க தமிழர் - திராவிடர் மதம் என்பது திராவிடர்களில் சித்தர், முத்தர், தெய்வீகத்தன்மை பெற்ற பெரியார்கள் பலரின் கருத்தும் ஆதாரமும் ஆதரவாய் வழிகாட்டியாய் இருக்கின்றன. வள்ளுவர் குறள் இருக்கிறது; புத்த தர்மம் இருக்கிறது; இந்து மதத்தின் பாற்பட்டதாகக் கூறப்படும் உள் சமயமான உலகாயத மதம், மாயாவாதி மதம், சங்கரர் மதம் என்னும் அத்வைத மதம், வேதாந்தஞானம் முதலியவைகள் கல்லு போன்ற ஆதாரங்களாக, வழிகாட்டிகளாக இருக்கின்றன. 

     ஆகவே, எழுங்கள் தமிழர்களே! 

     எழுங்கள் மெய்ஞான சமயவாதிகளே!!

   27-ந் தேதி வரும் புத்தர் ஜயந்தி நாள் அன்று இதற்கு துவக்க விழா செய்வதுபோல், சிறிதும் ஆதாரமும் அறிவும் அற்ற ஆபாச கற்பனை உருவா மூர்த்தமான கணபதி உருவை உடைத்துத் தூளாக்கி மண்ணில் கலக்கிவிடுங்கள். 

   இது மூடர்களுக்கு அல்லாமல், சுயநல சூழ்ச்சிக்காரர்களுக்கு அல்லாமல் மற்ற எவருக்கும் குற்றமாகத் தோன்றாது. கண்டிப்பாக இதில் யாதொரு தவறும் இல்லை .ஆகவே, ஒவ்வொரு தமிழரும் முன்வர வேண்டுகிறேன்.

கடவுள்கள் தொழில் கொலைத் தொழில்தான்

   பிள்ளையார் முதல் கிருஷ்ணன் வரையில் உள்ள எல்லா "கடவுள்களும், அசுரரை- அரக்கரை, இராட்சதரைக் கொல்ல ஒழிக்க "அவதாரம்' கொண்டவைகளேயாகும். 

   சூத்திரர்களும் பஞ்சமரும்தான் அசுரர், இராட்சதர் எனப்பட்டவர்கள். எப்படி எனில், வேதங்களை, வருணாசிரம தர்மங்களை ஏற்காதவர்களும், யாகம், ஓமம் முதலிய கிரியைகளை வெறுத்து எதிர்த்தவர்களும்தான் அசுரர், இராட்சதகர்கள் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. 

   சூரபதுமன், இரணியன், இராவணன், சமணர், புத்தர் முதலிய வர்கள் இதில் சேர்ந்தவர்களேயாவார்கள் என்றும் புராணங்களும், ஆழ்வார், நாயன்மார் பாடல்களும், பெரிய புராணமும், இராமாயண, பாரதமும் கூறுகின்றன.

 (11.5.1053 "விடுதலை" நாளிதழில், “வாருங்கள் தோழர்களே 27-ந்தேதி கணபதி உருவம் நாசமாக்க" என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை)

விடுதலை - 11.5.1053 

Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.